search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டிடிவி தினகரன்"

    • வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
    • போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    தேனி:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.ம.மு.க. சார்பில் டி.டி.வி. தினகரன் போட்டியிடுகிறார். இவர் நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தபோது அவரது ஆதரவாளர்கள் அதிக அளவில் திரண்டு உள்ளே செல்ல முயன்றனர்.

    போலீசார் அவர்களை தடுத்து நிறுத்திய போது கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பணி செய்ய விடாமல் தடுத்தனர். அன்னஞ்சி விலக்கில் இருந்து 70 கார்கள், 3 ஆட்டோக்கள், மோட்டார் சைக்கிள்களில் கட்சியினர் ஊர்வலமாக புறப்பட்டு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    வேட்பு மனு தாக்கலின் போது 5 பேர் மட்டுமே உள்ளே செல்ல முடியும் என்று போலீசார் அறிவுறுத்தியதால் மற்றவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர். இந்நிலையில் போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்து பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாக தேர்தல் பணியில் ஈடுபட்ட புதிய கண்காணிப்பு அலுவலர் நீதிநாதன் தேனி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    அதன் பேரில் டி.டி.வி. தினகரன் மற்றும் அக்கட்சி நிர்வாகி ராம்பிரசாத் உள்பட பலர் மீது 5 பிரிவுகளின் கீழ் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    தேனியில் உள்ள தனியார் விடுதியில் சந்தேகப்படும்படியான வெளியூர் நபர்கள் தங்கி இருந்து தேர்தல் பணியில் ஈடுபடுவதாக மாவட்ட கலெக்டருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் உதயகுமார் தலைமையிலான போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் விடுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் தஞ்சாவூரைச் சேர்ந்த கார்த்திக் என்பவர் தங்கி இருந்தார். அ.ம.மு.க. நிர்வாகியான அவர் தேர்தல் செலவுக்காக ரூ.4 லட்சத்து 49 ஆயிரத்து 500 பணத்தை வைத்திருந்தது தெரியவரவே அதனை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பணத்தை பெரியகுளம் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.

    • இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது.
    • பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள அ.ம.மு.க. வேட்பாளரும், அக்கட்சியின் பொதுச் செயலாளருமான டி.டி.வி. தினகரன் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

    பெரியகுளம் தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்டு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி கொடுத்துள்ளேன். அதே போல் மீண்டும் என்னை வெற்றி பெற வைத்தால் தேனி தொகுதியின் வளர்ச்சிக்கு வார்டு உறுப்பினர் போல் செயல்படுவேன்.

    ஆர்.கே.நகர் சட்டமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் அதே சின்னத்தில் இங்கும் போட்டியிடுகிறேன். ஜெயலலிதா இருந்த போது அவரிடம் தேனி தொகுதிக்கான திட்டங்களை பெற்றுத்தந்தது போல மீண்டும் வெற்றி பெற்றால் பிரதமர் மோடியிடம் கூறி வளர்ச்சிக்கான நிதியை வாங்கித் தருவேன்.

    தமிழ்நாட்டுக்கு தேவையான வளர்ச்சித் திட்டங்களை பெற மீண்டும் பிரதமராக மோடி வர வேண்டும். இந்தியா கூட்டணியில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே அறிவிக்கவில்லை. தலை இல்லாத முண்டம் போல அந்த கூட்டணி உள்ளது. பிரதமர் வேட்பாளரை ஒரு வேளை அறிவித்தால் அந்த கூட்டணி கட்சிகள் சிதறி ஓடி விடும்.

    தமிழகத்தில் போதை கலாச்சாரம் அதிகரித்து வருகிறது.

    கடந்த சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது உதயநிதி ஸ்டாலின் ஒற்றை செங்கலை கையில் தூக்கியபடி பேசினார். தற்போது மீண்டும் அதே செங்கலை தூக்கி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியளித்தார். இதற்காக 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்றும் அவர்களால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியவில்லை. அந்த ரகசியம் எங்களிடம்தான் உள்ளது என தி.மு.க.வினர் கூறி வந்த நிலையில் தற்போது பதில் கூற மறுத்து வருகின்றனர். இது போன்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து வரும் அந்த கட்சி வேட்பாளர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • பாஜக கூட்டணியில் அமமுக தேனி மற்றும் திருச்சி தொகுதிகளில் போட்டியிடுகிறது.
    • தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்தார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் அ.ம.மு.க., த.மா.கா., இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புதிய நீதிக்கட்சி, அ.தி.மு.க. தொண்டர்கள் உரிமை மீட்புக்குழு ஆகியவை அங்கம் வகித்துள்ளன.

    பாஜக கூட்டணியில் அமமுக தேனி மற்றும் திருச்சி தொகுதிகளில் போட்டியிடுகிறது.

    இந்நிலையில் தேனி, திருச்சி தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அறிவித்தார்.

    தேனி தொகுதியில் டிடிவி தினகரன், திருச்சி தொகுதியில் செந்தில்நாதன் போட்டியிடுகின்றனர்.

    அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:

    3-வது முறையாக மீண்டும் பிரதமராக மோடி பதவியேற்பார். தமிழகத்திற்கு தேவையான அனைத்து வளர்ச்சிகளையும் திட்டங்களையும் பெற்றுத்தருவேன் என்று கூறினார்.

    • திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது.
    • தேனியில் முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்குகிறார்.

    மக்களவைத் தேர்தலில் போட்டியிட உள்ள அமமுக வேட்பாளர்களை அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் நாளை அறிவிக்க உள்ளார்.

    பாஜக கூட்டணியில் திருச்சி மற்றும் தேனி ஆகிய தொகுதிகளில் அமமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இதுதொடர்பாக அமமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    அமமுக கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட G.கல்லுப்பட்டி, அருள்மிகு பட்டாளம்மன் திருக்கோயில் அருகே நாளை 24.03.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவில், நாடாளுமன்ற மக்களவை பொதுத்தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் தேனி மற்றும் திருச்சிராப்பள்ளி நாடாளுமன்றத் தொகுதிகளின் வெற்றி வேட்பாளர்களை அறிவிக்க உள்ளார்.

    அதன் தொடர்ச்சியாக தேனி நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் தனது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரத்தை டிடிவி தினகரன் தொடங்கவிருக்கிறார். அதற்கான விவரப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.
    • பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாமக, தமிழ் மாநில காங்கிரஸ், அமமுக, புதிய நீதிக் கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதில் பாமகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. புதிய நீதிக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தரப்பில் 3-ல் இருந்து 4 தொகுதிகள் கேட்ட நிலையில் இரண்டு தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும் என பாஜக தெரிவித்ததால் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை என தகவல் வெளியானது.

    இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.


    தி.நகரில் உள்ள பா.ஜ.க. தலைமை அலுவலகத்தில் மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், நயினார் நாகேந்திரன் முன்னிலையில் தொகுதி பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறியதாவது:-

    * நாங்கள் கேட்ட 2 தொகுதிகளை பா.ஜ.க. வழங்கியுள்ளது.

    * எந்தெந்த தொகுதிகளில் போட்டி என்பதை பாஜக தலைமை அறிவிக்கும்.

    * எண்ணிக்கை முக்கியமல்ல, கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்பதே முக்கியம் என்றார்.

    இதனிடையே, 2 தொகுதிகளில் ஒன்றில் போட்டியா? என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, நான் தேனியில் போட்டியிட வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பமாக உள்ளது என சூசகமாக பதில் அளித்தார்.

    முன்னதாக, பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வருகிற 24-ந்தேதி முதல் டி.டி.வி. தினகரன் பிரசாரம் செய்ய உள்ளார். வருகிற 24-ந்தேதி அன்று தேனி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்கிறார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நாளை கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார்.
    • மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    சேலம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் நரேந்திர மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்து வருகிறார். ஏற்கனவே தமிழகத்தில் திருப்பூர் மாவட்டம் பல்லடம், நெல்லை, சென்னை நந்தனம், கன்னியாகுமரி ஆகிய இடங்களில் பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார்.

    இந்தநிலையில் இன்று மாலை கோவையில் பிரதமர் மோடி ரோடு ஷோ (வாகன பேரணி) செல்கிறார். கோவை-மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள சாய்பாபா காலனி போலீஸ் நிலையம் அருகே புறப்படும் இந்த வாகன பேரணி ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் நிலையம் அருகே முடிவடைகிறது.

    இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் இருந்து விமானம் மூலம் மாலை கோவை வருகிறார். பின்னர் சாய்பாபா காலனிக்கு சென்று வாகன அணிவகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இதில் கட்சி நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சியை முடித்து கொண்டு பிரதமர் மோடி இரவு கோவையில் தங்குகிறார்.

    பின்னர் நாளை (19-ந் தேதி) கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடுக்கு பிரதமர் மோடி புறப்பட்டு செல்கிறார். அங்கு காலை 11.40 மணியளவில் நடைபெறும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகிறார். அதனை தொடர்ந்து சேலம், நாமக்கல், கரூர் பாராளுமன்ற தொகுதிக்கான பிரசாரக்கூட்டம் சேலத்தில் நாளை மதியம் 1.30 மணியளவில் நடக்கிறது. இதற்காக சேலம் அருகே உள்ள கெஜ்ஜல் நாயக்கன்பட்டியில் 44 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பந்தல் மற்றும் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்த பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு பிரதமர் மோடி சிறப்புரையாற்றுகிறார். இதற்காக பிரதமர் நரேந்திர மோடி பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு மதியம் 1.30 மணியளவில் மேடை அமைக்கப்பட்டுள்ள சேலம் கெஜ்ஜல் நாயக்கன்பட்டி மைதானத்திற்கு வருகிறார். இதற்காக அங்கு 3 ஹெலிபேடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

    சேலம் வரும் பிரதமர் மோடிக்கு சேலம், நாமக்கல் , கரூர் பாராளுமன்ற தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. தொடர்ந்து பிரதமர் மோடி பொதுக்கூட்ட மேடையில் பா.ஜ.க.வுக்கு ஆதரவு திரட்டும் வகையில் சிறப்புரையாற்றுகிறார். அப்போது மக்களையும் சந்திக்கிறார்.

    இந்த கூட்டத்தில் மாநில பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக பங்கேற்கிறார்கள்.

    பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் முதல் முறையாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி.தினகரன் ஆகியோர் பங்கேற்கிறார்கள். மேலும் கூட்டணி கட்சி தலைவர்களான ஜி.கே.வாசன், ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், ஜான்பாண்டியன், தேவநாதன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

    • பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம்.
    • பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு.

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தையை நடத்தினார்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் டி.டி.வி.தினகரனும் சேர முடிவு செய்துள்ளார். இருவரும் ஒன்றாக சேர்ந்து எடப்பாடி பழனிசாமி நிறுத்தும் அ.தி.மு.க. வேட்பாளர்களை தோற்கடிப்பதற்கு காய் நகர்த்தி வந்தனர்.

    பாரதிய ஜனதா கூட்டணியில் இருவருக்கும் தலா 4 தொகுதிகள் வரையில் ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    கட்சியும், கொடியும் இல்லாமல் தவித்து வரும் ஓ.பன்னீர்செல்வம் எந்த சின்னத்தில் போட்டியிடப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் பெரிய கேள்வியாக மாறி இருந்தது.

    பாரதிய ஜனதா கட்சி சின்னமான தாமரை சின்னத்தில் போட்டியிட்டால்தான் 4 தொகுதிகளை ஒதுக்க முடியும் என்றும் வேறு சின்னத்தை நீங்கள் விரும்பினால் 2 தொகுதிகளை மட்டுமே தர முடியும் என்றும் பாரதிய ஜனதா சார்பில் ஓ.பன்னீர்செல்வத்திடம் தெரிவிக்கப்பட்டது.

    ஆனால் ஓ.பி.எஸ். இதனை ஏற்க மறுத்து நிராகரித்துவிட்டார். அ.தி.மு.க.வை மீட்க இப்போதும் போராடி வருகிறோம். இந்த சூழலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எதிர்கால அரசியலை பாதிக்கும் என்று அவர் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    எந்த சின்னத்தில் போட்டியிடுவது என்பது மிகப் பெரிய சிக்கலாக மாறியிருப்பதால் வருகிற பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடாமல் பாரதிய ஜனதாவுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்க ஓ.பி.எஸ். அணி அதிரடியாக முடிவெடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களிடம் ஆலோசனை நடத்தி விரைவில் அது தொடர்பான முடிவை அறிவிக்க உள்ளார். இரட்டை இலை சின்னம் கேட்டு தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி வரும் ஓ.பன்னீர்செல்வம் அதில் தெளிவான முடிவு ஏற்பட்ட பிறகு அரசியல் களத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை வேகப்படுத்த முடிவெடுத்துள்ளார்.

    இருப்பினும் ஓ.பன்னீர்செல்வம் எடுத்துள்ள இந்த தேர்தல் புறக்கணிப்பு முடிவு அவரது ஆதரவாளர்களை சோர்வடைய செய்திருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் ஒருவர் கூறும் போது, தற்போது எங்களிடம் கட்சி, சின்னம் என எதுவும் இல்லை. இந்த சூழலில் பாராளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கூட்டணியில் இணைந்து தாமரை சின்னத்தில் போட்டியிட்டால் அது எங்களது எதிர்கால நலனை பாதிக்கும் என்பதால் இந்த தேர்தலில் போட்டியிடாமல் விலகி இருப்பது என முடிவெடுத்து இருக்கிறோம்.

    விரைவில் அது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் அறிவிப்பு வெளியிடுவார். இருப்பினும் பாராளுமன்றத் தேர்தலில் நாங்கள் நிச்சயம் களத்தில் இருப்போம். பா.ஜனதா கூட்டணியை ஆதரித்து அறிவிப்பு வெளியிட்டுவிட்டு பிரசாரம் செய்ய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்துள்ளார் என்றார்.

    • கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.
    • எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர்.

    சென்னை:

    பா.ஜனதா கூட்டணியில் இணைந்து பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதாக முன்னாள் முதலமைச் சர் ஓ.பன்னீர்செல்வமும், அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் அறிவித்தனர்.

    தொகுதி பங்கீடு குறித்து இதுவரையில் வெளிப்படையான பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. ஆனால் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வினர் பேசி வருகின்றனர்.

    தமிழகத்திற்கு பிரதமர் மோடி ஒரு வாரத்தில் 2 முறை சுற்றுப் பயணம் செய்தார். அப்போது கூட்டணி கட்சி நிர்வாகிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பா.ஜனதாவிடம் இருந்து அழைப்பு வரவில்லை.

    இந்நிலையில் பா.ஜனதா தொகுதி பங்கீடு குழுவினர் ஓ.பி.எஸ். மற்றும் டி.டி.வி. தினகரனை விரைவில் சந்திக்க முடிவு செய்து உள்ளனர். பா.ஜ.க. விடம் ஓ.பன்னீர் செல்வம் தரப்பில் 10 தொகுதிகள் கேட்க முடிவு செய்துள்ளனர். அதே போல் டி.டி.வி. தினகரன் தரப்பிலும் 10 தொகுதிகள் கேட்கின்றனர்.

    கட்சியில் உள்ள முக்கிய நிர்வாகிகளுக்கு சீட் வாங்கி கொடுக்க வேண்டும் என்பதில் இருவரும் ஆர்வமாக உள்ளனர்.

    ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் ஆகிய இருவருக்கும் சேர்ந்து பா.ஜ.க. 10 தொகுதிகளை ஒதுக்க முன் வருவதாக தெரிகிறது. அதை இருவரும் சமமாக தலா 5 தொகுதிகள் வீதம் பிரித்து கொள்ளும்படி கூறி உள்ளனர்.

    இது குறித்த பேச்சு வார்த்தை விரைவில் நடைபெற உள்ளது. எந்தெந்த தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வமும், டி.டி.வி. தினகரனும் பட்டியல் தயாரித்து கொடுத்துள்ளனர். ஓ.பி.எஸ். தரப்பில் யார்-யாருக்கு எந்தெந்த தொகுதிகள் கேட்கப்படுகிறது என்ற விவரம் வருமாறு:-

    1.தேனி-ப.ரவீந்திர நாத்குமார், 2. ஸ்ரீபெரும்புதூர், 3.திருச்சி, 4.மதுரை, 5.சிவகங்கை, 6.தஞ்சை, 7.வட சென்னை, 8.காஞ்சிபுரம், 9.கிருஷ்ணகிரி, 10.கோவை

    அ.ம.மு.க. போட்டியிட விரும்பும் தொகுதிகள்: 1.ராமநாதபுரம், 2.திருநெல்வேலி, 3.திருச்சி, 4.தென்சென்னை, 5.வேலூர், 6.நீலகிரி, 7.நாகப்பட்டிணம், 8.விழுப்புரம், 9.திண்டுக்கல், 10.திருவள்ளூர்

    தாமரை சின்னத்தில் நிற்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால் ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரனும் தனி சின்னத்தில் நிற்க விரும்புவதாக தெரிவித்து உள்ளனர்.

    • கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன்.
    • எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் உள்ள அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரர் கோவிலில் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது மனைவி அனுராதாவுடன் சென்று கோ- பூஜை, கஜ பூஜை செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    எனக்கு 60 வயது பூர்த்தி அடைந்ததை அடுத்து அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்பாளின் அனுகிரகத்தை பெறுவதற்காக வந்து பூஜைகள் செய்தேன். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிக்காக சில கட்சிகளுடன் பேசிக் கொண்டிருப்பது உண்மை. கூட்டணி குறித்த இறுதி வடிவம் எட்டிய பிறகு அது பற்றி கூறுகிறேன். நானும் ஓ.பி.எஸ்.ம் வருங்காலத்தில் அரசியலில் இணைந்து செயல்படுவது என ஏற்கனவே முடிவு எடுத்துள்ளோம். எங்களிடம் தான் குக்கர் சின்னம் உள்ளது. எனவே வீண் வதந்திகளை நம்பாதீர்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பா.ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
    • பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    பிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார். பல்லடத்தில் நடைபெறும் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்கிறார்.

    பிரம்மாண்டமாக நடைபெற உள்ள இந்த கூட்டத்தை பாராளுமன்ற தேர்தல் பிரசார கூட்டமாகவே நடத்துகின்றனர். இதற்காக தமிழகம் முழுவதிலும் இருந்து பல்லாயிரக்கணக்கான தொண்டர்களை திரட்டுகிறார்கள்.

    இதற்கிடையில் பா. ஜனதா கூட்டணியில் இடம் பெறும் கட்சிகளின் தலைவர்களையும் இந்த மேடையில் அமர வைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

    பா.ஜனதாவுடன் கூட்டணி பேசி வரும் ஓ.பன்னீர்செல்வம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

    அதே போல் அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரனும் பங்கேற்கவில்லை.

    இதுபற்றி கட்சி வட்டாரத்தில் இரு விதமான தகவல்கள் பரவி வருகிறது. அதாவது பா.ஜனதா டெல்லி தலைவர்கள் இன்னும் அ.தி.மு.க. உறவுக்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். எனவே அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு நாம் கூட்டணியை உறுதிப்படுத்தலாம் என்று இருவரும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    இன்னொரு தகவல், சிங்கிள் தொகுதி போதாது. குறைந்தபட்சம் இரண்டு தொகுதி வேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் 'சீட்' உறுதியான பிறகு செல்லலாம் என்றும் முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.

    ஆனால் மோடியை வரவேற்க விமான நிலையத்துக்கு செல்லலாம் என்று கூறப்படுகிறது.

    பா.ஜனதா-த.மா.கா. கூட்டணி உறுதியாகி இருப்பதால் த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் கலந்து கொள்கிறார். அதே போல் ஏ.சி.சண்முகம், பாரிவேந்தர், தேவநாதன், தமிழருவி மணியன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    • எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும்.
    • வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது.

    நெல்லை:

    நெல்லையில் நடந்த அ.ம.மு.க. பொதுக் கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் பேசியதாவது:-

    தமிழகத்தில் இளைஞர் படை அதிகம் உள்ள கட்சி அ.ம.மு.க. ஜெயலலிதாவின் கொள்கைகளை நூற்றாண்டுகளுக்கு எடுத்துரைப்பதே எங்களின் லட்சியம். தேர்தல் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டுவிடாமல் கொள்கையை தாங்கி பிடிப்போம். நம்பிக்கை துரோகம் செய்பவர்கள் அதற்கான பலனை அனுபவித்தே தீருவார்கள்.

    எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும். கவர்னரின் தயவினால் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தப்பித்து வருகின்றனர். அவர்களை பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தண்டிப்பார்கள்.

    எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக சீர்கேட்டினாலும், தி.மு.க. திருந்தியிருக்கும் என்றும் நினைத்து கடந்த சட்டமன்ற தேர்தலில் பொதுமக்கள் தி.மு.க.விற்கு வெற்றிக்கனியை தந்தனர். வாக்காளர்களை வாக்குறுதிகளால் ஏமாற்றும் இயக்கம் தி.மு.க. என்பதை நிரூபித்துவிட்டது. ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் 90 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. ஆனால் பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு தற்போதைய நிதிநிலை அறிக்கையில் பல்வேறு ஏமாற்று திட்டங்களை தி.மு.க. அறிவித்துள்ளது.

    மகளிர் உரிமை திட்டம் தகுதியான பலருக்கும் கிடைக்கவில்லை. சிறு-குறு தொழில் முனைவோர் கடுமையான மின்கட்டண உயர்வால் திணறி வருகின்றனர். ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கொண்டு வந்த மாணவர்களுக்கான மடிக்கணினி திட்டம் ரத்தாகி உள்ளது. அரசின் கடன் சுமையை குறைப்போம் என்ற தி.மு.க.வின் வாக்குறுதி மறக்கப்பட்டு கடன் சுமை அதிகரித்துள்ளது.

    கூட்டணி பலத்தால் வெற்றியாளர்களை போல் காட்டி வருகிறார்கள். பாராளுமன்ற தேர்தலில் வாக்குகளை விலைக்கு வாங்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தி.மு.க. உள்ளது. அதற்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும். 2024 பாராளுமன்ற தேர்தலில் அ.ம.மு.க.வின் வெற்றி கணக்கை தொடங்க வேண்டும். வருகிற தேர்தலில் தி.மு.க. மற்றும் எடப்பாடி பழனிசாமியை தோற்கடிப்பதே அ.ம.மு.க. வின் இலக்கு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.
    • எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும்.

    சென்னை:

    அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என்ற மூன்று முக்கிய கொள்கைகளை முன்னிறுத்தி முழங்கியதோடு, ஆதிக்கமற்ற சமுதாயம், ஜனநாயக உரிமைகள் பாதுகாப்பு, பொருளாதாரத் துறையில் சமதர்மம் என்பதை குறிக்கோளாய் கொண்டு இயங்கிய பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவுதினம் இன்று.

    "எதிரிகள் தாக்கித் தாக்கி தங்களின் வலுவை இழக்கட்டும். நீங்கள் தாங்கி தாங்கி வலுவைப் பெற்றுக் கொள்ளுங்கள்" என்ற பேரறிஞர் அண்ணாவின் வரிகளுக்கேற்ப நம்முடைய எதிரிகளும் துரோகிகளும் நம்மை எவ்வளவு பலவீனமாக்க முயற்சி செய்தாலும் அவற்றை துணிச்சலுடன் எதிர்கொண்டு அண்ணாவின் கனவுகளை, லட்சியங்களை நிறைவேற்ற உறுதியேற்போம் என கூறியுள்ளார்.

    ×